Vipulananda Adigal

யாழ் ஒலி இசைக்கத்தோன்றிய பேரொளி சுவாமி விபுலாநந்தர்

எம். ரம்போலா மாஸ்கரேனஸ்

வ்வாண்டில் (28-2-1942) தமிழ்ப் பேரவையின் தொடக்க விழாச் சொற்பொழிவாற்ற வருகின்றவர் விபுலாநந்தர் என விளம்பரஞ் செய்திருந்தார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரவை விழா என்றால் வெகு பிரமாதமாக நடைபெறும். அதுவும் சொற்பொழிவாளர் விபுலாநந்தர் என்றால் பின்னர் சொல்லவும் வேண்டுமா? அடிகள் ஏற்கனவே அப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் எனவே யாவரும் அவருடைய வருகைக்காக உரிமைத் தொடர்போடும் பெரு விருப்போடும் காத்திருந்தனர். விபுலாநந்தஜீ என்று எப்படியோ விளம்பரப் பலகையில் பெயர் ஏறியிருந்தது. மாணவர்களிற் பலர் அடிகள் வடநாட்டினரோ என்று ஐயுற்றதற்கு இந்த ஜீயே காரணம். அடிகள் அப்பொழுதுதான் வடக்கே மாயாவதி என்னும் இடத்திலிருந்து வருகிறார்கள் என்பதும் அம் மாணவ அன்பர்களின் ஐயத்தை ஊர்ஜிதப்படுத்த ஒருவாறு உதவியது.

அவர்கள் விபுலாநந்தஜீயை நேரில் பார்த்தார்கள். ஐயம் நீங்கப் பெற்றார்கள். அவருடைய வடிவான யாழ்ப்பாண இன்னிசைப் பேச்சு அவர் ஈழநாட்டினரே என்பதை இடித்து முழக்கியது. அடிகள் கரும்பொன் நிறத்தினர், கட்டுடல் பொலிவினர் காட்சிக்கு இனியர்; வெண்கல ஒலியினை நிகர்த்த பண்கலந்த தொனியினர்; கேட்டார்ப் பிணிக்கும் திறத்ததாய்க் கேளாரும் வேட்ப மொழியும் நூநலம் அமைந்தவர்.

சுவாமி விபுலாநந்தர் நம்மவரின் பழம் பெருமையை ஆய்ந்தறிந்து அறிவித்தார், அதைப் போலவே குறைகளையும் கண்டு சொல்லி அவைகளை நீக்கும் வழிகளைச் சுட்டினார். தமிழர் நிலை அன்றும் இன்றும் என்பதைப் பற்றி அடிகளின் கருத்தைச் சுருங்கக் கூறுவேன்.

“நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்நாட்டில் செம்மையோடு வாழ்ந்தோம். இன்றும் ஓரளவிற்கு ஆற்றலோடு வாழ்கின்றோம். வள்ளுவனையும் இளங்கோவையும் கம்பனையும் ஈன்றளித்த எமதன்னை இந்நாளிலும் பாரதி என்ற வீரக் கவிஞனை உலகிற்கு உதவினாள்.

சங்க காலத்திலிருந்த தமிழ் மக்களின் மனவலியும் உடல்வலியும் இன்று நம்மிடத்தில் குறைவுற்றுக் காணப்படுவனவாயினும் அவரது வலிமைக்குக் காரணமாயிருந்த வாய்மையும் ஈகையும் தமிழ் மக்களிடத் தில் இன்றும் விளங்குகின்றன.

தமிழன் உண்மையுடையவன்; நடுநிலைமையுடையவன்; இயல்பாகவே ஈகை என்னும் பெருங் குணமுடையவன், இக்குணங்கள் நம்மிடத்து நிலைபெற்றிருக்கும் வரையில் நாம் உயிர் வாழ்வோம்; எல்லா உயர்வும் நம்மை வந்து எய்தும்.

தேச சரித்திரத்தைக் கூறும் நூல்கள் தமிழ் மொழியில் இல்லை. இக்குறைவை நாம் விரைவில் நிறைவு செய்யவேண்டும். அண்டப் புளுகுகள் பொலிந்த புனைந்துரைக் கதைகளையும் வாழா பொழுது போக்கிற்காக ஏற்பட்ட பொய்க் கதைகளையும் படிப்பதைச் சிறிது காலம் நிறுத்திவிட்டு உலகின் பல பாகங்களிலுமுள்ள மக்களின் வாழ்க்கையை நன்கு புலப்படுத்தும் உண்மைச் சரித்திரங்களைக் கற்க முயல்வோமாக.

மறுமலர்ச்சி எழுத்தாளர்க்கு சுவாமிகள் கூறும் அறிவுரை "நீங்கள் உங்கள் மனோதர்மத்தின்படி நன்றாக எழுதுங்கள். புதியன புதியனவாக எழுதித் தமிழை வளருங்கள். ஆனால் மற்றவர்களைக் கண்டிக்கத் துணியாதீர்கள். எழுத்தில் எப்பொழுதும் சொற் செட்டும் இலக்கணமும் கருத்து ஆழமும் இருக்க வேண்டியது பிரதானம்.

அருமையாக எழுதக்கூடிய எத்தனையோ எழுத்தாளர்கள் தமிழிலக்கியங்களிலே பயிற்சியின்மையாலோ பயிற்சிக் குறைவினாலோ - சில இடங்களில் வழுக்கி விழுவதைப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. இவர்கள் மனது வைத்துக் கொஞ்சம் தமிழ்நூற் பரிச்சயம் செய்து கொண்டால் எவ்வளவு நலமாயிருக்கும் தமிழ் நாட்டுக்குத் தேவை பழந்தமிழ்நூற் பரிச்சயம் உள்ள புதுமை எழுத்தாளர்களே!"

துறவுநிலை மேற்கொள்ளுமுன் விபுலாநந்தரின் பெயர் மயில்வாகனன். மயில்வாகனன் 1916 ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண்டித பரீக்ஷையில் தேர்ந்தார். 1920 ல் பி.எஸ்சி. லண்டன் பரீக்ஷையில் வெற்றி பெற்றார். பண்டிதர் மயில்வாகனனார் பி.எஸ்சி. லண்டன் செந்தமிழ்ச் சஞ்சிகையில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில்: பொருள் நூல் சிறப்பு, சூரிய சந்திரோற்பத்தி, மலை கடல் உற்பத்தி முதலியன.

1922-ல் மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்த மயில்வாகனனார் பிரபோத சைதன்யர் என்ற பிரமசரிய ஆசிரமப் பெயர் சூட்டப் பெற்றார். இந்நிலையில் இராமகிருஷ்ண விஜயம் (தமிழ்), வேதாந்த கேசரி (ஆங்கிலம்) என்ற பத்திரிகைகளுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றார். இக்காலத்தில் சென்னையில் பல சபைகளில் ஆய்வுரை நிகழ்த்தினார். செந்தமிழுக்குத் தொடர்ந்து கட்டுரை வழங்கினார்.

1924-ல் துறவு பூண்டு விபுலாநந்தர் என்று பெயர் பெற்றார். அடுத்த ஆண்டில் ஈழநாட்டில் சிவாநந்த வித்தியாலயம் நிறுவி அதன் அதிபராக அரிய சேவை செய்தார். 1931-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்தார். மூன்று ஆண்டுகள் அப்பதவியைத் திறம்பட நிர்வகித்து இமயமலைக்கு வடக்கே திருக்கயிலாய மலைக்கு யாத்திரை செய்தார். இமயச்சாரலில் உள்ள மாயாவதி என்னுமிடத்தில் 1936-41 ல் பிரபுக்த பாரத் என்ற பத்திரிகை ஆசிரியரானார். 1943 ல் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்றார்.

1947 மே மாதம் 5, 6, தேதிகளில் கும்பகோணத்தையடுத்த திருக்கொள்ளம்பூதூரில் தமது யாழ் நூலைப் புரவலர்கள் புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றினார். அந்நூல் 15 ஆண்டுகளாக ஆராய்ந்து எழுதப்பெற்ற அரியநூல். அடிகளாரின் நீண்டகால ஆராய்ச்சியின் விளைவாகத் தொன்மை வாய்ந்த யாழின் செம்மையான இயல்பு புலன் ஆனது அடிகளாரும் அரங்கேற்றம் நிகழ்ந்த இரு திங்களுள் மறைந்தார்கள். இந்த யாழ் நூல் காரணமாக, விபுலாநந்தர் யாழ் ஒலி இசைக்கத் தோன்றிய பேரொளியாக விளங்குகின்றார்கள்.

அடிகள் இயற்றி, மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் பிரசுரித்த, மதங்க சூளாமணி என்ற நாடகநூல் புதிய உருவில் வெளி வரவேண்டும் அவர்கள் செந்தமிழிலும், தமிழ் பொழிலிலும் பிற சஞ்சிகைகளிலும் வெளியிட்ட கவிதைகளையும் கட்டுரை களையும் தொகுத்துத்தருவோர் திறமான இலக்கிய சேகரம் செய்தவராவர்.


எழுதியவர்: எம். ரம்போலா மாஸ்கரேனஸ், எம். ஏ.

தமிழ்ப் பேராசிரியர்

செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

நூல்: தமிழ்த் தொண்டர்கள்

வெளியீடு: 1952